கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்
- IndiaGlitz, [Saturday,March 31 2018]
தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடப்பட்டது. ஆனால் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் தற்போது அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு கொடுத்துள்ளதால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்தில் நேரில் சென்று கலந்து கொள்ளவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்
அந்த வகையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தூத்துகுடிக்கு சென்று அப்பகுதி மக்களுடன் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமல் செல்வதற்கு ஒருநாளுக்கு முன்பே அதாவது இன்றே நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டார் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
48 வது நாளாக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்' என்று கூறியுள்ளார்.