கமல் கட்சியுடன் கூட்டணியா? சரத்குமாரின் அதிரடி பதில்
- IndiaGlitz, [Thursday,March 01 2018]
கோலிவுட் திரையுலகில் இருந்து கமல், ரஜினி ஆகிய இருவருமே அரசியலை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில் கடந்த 22 வருடங்களாக 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்ற அரசியல் கட்சியை தொடங்கி திமுக, அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார் நடிகர் சரத்குமார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல் கட்சியுடன் கூட்டணியா? என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தமிழக அரசு நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றது. தத்தளித்து வரும் கப்பலை சீரமைக்கும் முயற்சியை எடுத்து வரும் தமிழக அரசுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு கட்சியின் தலைவர் மறைந்துவிட்டால் அந்த கட்சி என்ன ஆகும் என்று அனைவருக்கும் தெரியும். இருந்தும் ஒருசில குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் ஆளும் கட்சி கவனம் செலுத்தி வருகிறது
நான் அரசியலில் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து 22 வருடங்களாக உள்ளேன். 1996ஆம் ஆண்டு சூரிய வம்சம், நாட்டாமை போன்ற படங்களை ஹிட் கொடுத்துவிட்டு அதிமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் இறங்கினேன். ரிட்டையர் ஆன பின்னர் நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இன்று அரசியலுக்கு வருபவர்கள் குறித்து எனக்கு தெரியாது
கமல்ஹாசனுடன் உங்கள் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'கமல்ஹாசனுடன் நான் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும். தேவையென்றால் அவர்தான் என்னுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்று கூறினார்.