சரத்குமார் - சுஹாசினி நடிக்கும் புதிய படம்: முழு விபரங்கள்!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சுஹாசினி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

எம்360 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ரோஷ் குமார் என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் திருமலை பாலுசாமி என்பவர் இயக்க உள்ளார். இந் தபடம் குறித்து எம்360 ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது: இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது திரு. சரத்குமார் அவர்கள் தான். இயக்குநருக்கும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதையில் மண்ணின் மகளாக , மீனாட்சி எனும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில், திருமதி. சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்தக்கதையை மிக நேர்த்தியாகவும், இதுவரை மக்களுக்கு சொல்லபடாத விஷயத்தை, சொல்லும் விதமாகவும் அமைத்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது

குடும்ப சென்டிமென்ட் கலந்த இந்த படத்தின் கதையில் தற்காலத்திற்கு தேவையான ஒரு முக்கிய செய்தி உள்ளது என்றும் இந்த படத்தில் நாயகியாக அஸ்வதி என்பவர் நடிக்க இருப்பதாகவும், மேலும் நந்தா, சுஹாசினி, சிங்கம்புலி, சித்திக் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையில், ‘தொரட்டி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவில், விக்கி வினோத்குமார் சண்டை பயிற்சியில், ஸ்ரீமன் பாலாஜியின் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.