தேர்தல் முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. சரத்குமார்
- IndiaGlitz, [Saturday,September 26 2015]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் அக்டோபர் 2ஆம் தேதி பாண்டவர் அணியின் ஸ்ரீராகவேந்திர திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ள நிலையில் சரத்குமார் அணியினர் மதுரை நாடக நடிகர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
சரத்குமார், ராதிகா, ராதாரவி, கே.என்.காளை, ராம்கி, பாத்திமாபாபு, பசி சத்யா ஆகியோர் இன்று மதுரையில் நாடக நடிகர்களிடம் தங்கள் அணிக்காக ஆதரவு திரட்டினர். நாடக நடிகர்களிடையே ராதாரவி பேசும்போது, ''எங்களுக்கு நிகரானவர்கள் கிடையாது. சரத்தை விட ஒரு தலைவர் யாருமில்லை. எதிரணியர் தரும் 500க்கும், 1000க்கும் விலை போய் விடாதீர்கள். அவனுங்களுக்கு மதுரை நாடக நடிகர் சங்கம், புதுக்கோட்டை சங்கமெல்லாம் இப்பத்தான் தெரியும். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்கு நல்லது. வாக்களித்தால் உங்களுக்கு நல்லது'' என்று பேசினார்.
பின்னர் பேசிய சரத்குமார், "எங்கள் மேல் தொடர்ந்து ஊழல் புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் இதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால், பணம் கைமாறிவிட்டது என்று எஸ்.வி.சேகரும், விஷாலும் ஆதாரமில்லாமல் சொல்லி வருகிறார்கள். ரஜினி, கமல் அவர்களை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு ஜனநாயகப்படி உரிமை உண்டு. இந்த சரத்குமார் நடிகர் சங்கத்துக்கு ஒன்றுமே பண்ணவில்லை என்று சொல்லும்போது மனது வலிக்கிறது. நாளை தேர்தல் நடந்து முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. என்னை பற்றி அவதுறாக பேசியவர்கள் முகத்தில் என்னால் முழிக்க முடியாது. இவ்வளவு நாள் ஷாப்டாக இருந்துவிட்டேன். இனி இருக்க மாட்டேன். நான் யாரென்பதை காண்பிப்பேன்'' என்று பேசினார்