நடிகர் சந்தானம் உறவுப்பெண் மர்ம மரணம்? கொலையா? விபத்தா?
- IndiaGlitz, [Sunday,May 23 2021]
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்து இருக்கும் நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிக்ர் சந்தானத்தின் உறவுக்கார பெண் ஜெயபாரதி என்பவர் திருவாரூர் பகுதியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வேலை செய்து வரும் விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் கணவருடன் வாழ்ந்து வந்த ஜெயபாரதி ஒருசில வருடங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெயபாரதி தனது கணவர் மீது அவர் வேலை செய்யும் அமெரிக்க அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரசாத்தின் வேலைக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து புகாரை வாபஸ் பெறுமாறு விஷ்ணு பிரகாஷ் ஜெயபாரதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வேலை முடித்து ஜெயபாரதி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மர்ம வாகனம் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது சாதாரண விபத்து அல்ல என்றும் விஷ்ணு பிரகாஷ் தான் கூலிப்படையை ஏவி தனது மகளை கொலை செய்து விட்டதாகவும் ஜெயபாரதியின் பெற்றோர்கள் புகார் கொடுத்து உள்ளனர். சந்தானம் தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கை தீர விசாரிக்க சொல்லி இருப்பதாகவும் இதன் காரணமாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.