வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

நடிகர் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படம் ’ஏ1’. இந்த படம் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூலித்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் ’ஏ1’ படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பதும், ’ஏ1' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் இந்த படத்திலும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை லார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சந்தானம் மீண்டும் இயக்குனர் ஜான்சன் உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சந்தானம் நடித்த டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இம்மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.