சிறுத்தை சிவா, அட்லி எல்லாம் என்ன பண்ணுவாங்க: சந்தானத்தின் 'டகால்டி' டீசர்

  • IndiaGlitz, [Sunday,December 01 2019]

சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் ‘டகால்டி’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சந்தானத்துடன் யோகிபாபுவும் இணைந்துள்ளதால் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடி கலக்குகிறது.

அஜித், விஜய்யை வைத்து படமெடுத்து பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவும் என நாயகி கூற, அதற்கு சந்தானம், ‘அப்ப சிறுத்தை சிவா, அட்லி எல்லாம் என்ன பண்ணுவாங்க’ என்ற டைமிங் காமெடியும், ‘நீயே அவன் இருக்குற இடம் தெரியாம தான் என்னை அடிக்கிற, என்னை எப்படி அவனுக்கு பார்சல் செய்வ’ என்ற யோகிபாபுவின் வசனமும் நிச்சயம் காமெடி ரசிகர்களை ரசிக்க வைக்கும்.

‘நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல, என்னமா ஆக்ட் கொடுக்குற’ என்று யோகிபாபுவை பார்த்து சந்தானம் பேசும் வசனம் நிச்சயம் திரையரங்கில் கைதட்டலை பெறும்.

காதல், காமெடி, கலர் கலரான பெண்களுடன் கவர்ச்சி நடனம், வில்லன்களையும் கலாய்க்கும் சந்தானம் என இந்த படம் ஒரு ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’ போல் ஒரு முழுநீள காமெடி படமாக இருக்கும் என இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி, தருன் அரூரா, சந்தான பாரதி, மனோபாலா ஹேமந்த் பாண்டே, ரேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை எஸ்.பி.செளதிரி தயாரித்துள்ளார்.