சென்னை திரையரங்கில் 'குலுகுலு' திரைப்படம் பாதியில் நிறுத்தம்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,July 29 2022]
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சந்தானம் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘குலுகுலு’. இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு திரையரங்கில் ‘குலுகுலு’ திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் திடீரென பாதியில் படம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த விசாரித்தபோது சில ரசிகர்கள் டிக்கெட் எடுக்காமல் திரையரங்கிற்குள் சென்றுவிட்டதாகவும், அதனால் டிக்கெட் எடுத்தவர்களுக்கு இருக்கை கிடைக்காததால் வாக்குவாதம் நடந்ததாகவும் இதன் காரணமாகவே படம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து திரையரங்க நிர்வாகிகள் டிக்கெட் எடுக்காதவர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பின்னர் மீண்டும் படம் திரையிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் திரையரங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் சந்தானத்தின் வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.