கட்டப்பா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர்: விஜயேந்திர பிரசாத் தகவல்
- IndiaGlitz, [Saturday,July 11 2020]
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சத்யராஜ், கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸில் பாகுபலியை கட்டப்பா கொலை செய்வது போன்று முடித்திருக்கும் என்பதால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் என்பதற்காகவே அனைவரும் இரண்டாம் பாகத்தை பார்த்தனர் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பாகுபலி’ திரைப்படத்தின் கட்டப்பா கேரக்டரில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை தான் ராஜமவுலி முடிவு செய்திருந்தாராம். ஆனால் சஞ்சய்தத் அந்நேரம் மும்பை சிறையில் இருந்ததால், அவரை வெளியே அழைத்துவர முயற்சி செய்ததாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னரே அவர் சத்யராஜை தேர்வு செய்ததாகவும் ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி படத்தின் திரைக்கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் கட்டப்பா கதாபாத்திரத்தில் சஞ்சய்தத் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு பெயர் வாங்கி இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்றும் அந்த கேரக்டரில் அவ்வளவு அருமையாக சத்யராஜ் நடித்து இருந்தார் என்றும் ராஜேந்திர பிரசாத் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.