அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை செய்து 5 வயதில் 'டாக்டர்' பட்டம் வாங்கிய சிறுமி..!
- IndiaGlitz, [Friday,February 07 2020]
அம்பு எய்தல் போட்டியில் சிறந்து விளங்கும் 5 வயதுச் சிறுமி சஞ்சனாவுக்கு மும்பையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரின் 5 வயது மகள் சஞ்சனா. இச்சிறுமி, தன் இரண்டரை வயதிலிருந்து வில் வித்தை கற்று, அதில் சிறந்து விளங்குகிறார். கராத்தே மற்றும் வில் அம்பு விளையாட்டுப் பயிற்சியாளர் ஹுசைனி இச்சிறுமிக்குப் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 2018 சுதந்திர தினத்தின்போது, சிறுமி சஞ்சனா மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி, பார்வையாளர்களை மிரளச் செய்தார்.
இதுவரை வில் அம்பு எய்தல் போட்டியில் 3 முறை உலக சாதனை படைத்துள்ளார் சஞ்சனா. இதனைப் பாராட்டி மும்பையில், 'அசாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சார்பில், சிறுமி சஞ்சனாவுக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது. 'டாக்டர்' பட்டம் பெற்றுக்கொண்டு சிறுமி சஞ்சனா விமானம் மூலம் மும்பையில் இருந்து தன் பெற்றோருடன் இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி சஞ்சனா, எல்லோருக்கும் இனிய தமிழ் வணக்கம். எனக்கு மும்பையில் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கின்றனர். வில் அம்பு எய்தல் போட்டியில் நிறைய சாதனைகள் படைத்ததால் கொடுத்திருக்கின்றனர். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெற்றோர்களுக்கு ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். தொலைக்காட்சியில் ஒரு சிறுமி நடனம் ஆடினால், அதைப் பார்த்து உங்கள் குழந்தைகளையும் நடனம் ஆடுமாறு வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்குப் பிடித்த கலைகள், விளையாட்டுகளில் சேர்த்து விட வேண்டும். குழந்தைகளை ஊக்குவியுங்கள் எனத் தெரிவித்தார்.