கொரோனா வைரஸ் காமெடி அல்ல… பாதிப்பில் இருந்து மீண்ட நட்சத்திர வீராங்கனையின் வைரல் டிவிட்!
- IndiaGlitz, [Wednesday,January 20 2021] Sports News
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வரும் சானியா மிர்சா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அதில் இருந்து மீண்டு ஆரோக்கியம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் வெளியிட்டு உள்ள தனது டிவிட்டர் பதிவில் கொரோனா வைரஸ் என்பது நகைச்சுவை அல்ல என்ற காட்டமான கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டர் பதிவில் ,
“இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தால் தற்போது அதில் இருந்து மீண்டு ஆரோக்கியமாக உள்ளேன். ஆனால் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வைரசின் பாதிப்புகள் அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாதது உண்மையில் எனது அதிர்ஷ்டம் தான். ஆனால் நான் தனிமைப் படுத்தப்பட்டு எனது இரண்டு வயது குழந்தை மற்றும் குடும்பத்தை விட்டு தனிமையில் இருந்தது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அதனால்தான் அனைவரையும் மாஸ்க் மற்றும் அடிக்கடி கைகளைக் கழுவவும் அறிவுறுத்தி வருகிறேன்.
இந்த வைரஸ் ஒன்றும் காமெடி அல்ல. நான் அதிகபட்சமான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இருந்தேன். அப்படி இருந்தும் இந்த வைரசினால் பாதிக்கப் பட்டேன். நமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒன்றாக இணைந்து இந்த வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினரின் நிலையை நினைத்தால் எனக்கு உண்மையில் பயமாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிகுறிகளும் நிலையில்லா தன்மையும் இந்த வைரசை மிகவும் வலிமையானதாக மாற்றுகிறது. மேலும் நமது உடல் நிலையைப் பலவீனப்படுத்துவதுடன் மனதளவிலும் இந்த வைரஸ் நம்மை மிகவும் சோதிக்கிறது’‘ எனத் தெரிவித்து தனது இரண்டு வயது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
A quick update .. ???? #Allhamdulillah I am fine now .. pic.twitter.com/7s2pJM6ChX
— Sania Mirza (@MirzaSania) January 19, 2021