காஷ்மீர் தாக்குதல் விவகாரம்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா
- IndiaGlitz, [Monday,February 18 2019]
சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் சாதாரண குடிமகன் முதல் பிரபலமானவர்கள் வரை தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்த தாக்குதலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது குறித்து நெட்டிசன்கள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகின்ன்றனர். இதற்கு சானியா மிர்சா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
'பிரபலங்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்த டுவிட்டா், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் புல்வாமா தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. உங்கள் வெறுப்பு மற்றும் கோபத்தை காட்டுவதற்கு வேறு இடம் இல்லை என்பதால் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீா்கள்.
தீவிரவாத தாக்குதல்களை பொது இடத்தில் கண்டிக்க வேண்டும் என்று அவசியமோ, நான் என்னுடைய வீட்டு மொட்டை மாடி மீது நின்றுகொண்டும், சமூக வலைதளங்களில் கூவியும் எனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியமோ இல்லை.
தீவிரவாதம் செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கத்தக்கவர்களே. அதே போன்று தீவிரவாதத்தை பரப்புபவா்கள் யாராக இருந்தாலும் அவா்களும் கண்டனத்திற்கு உரியவா்கள்தான். சரியான முறையில் சிந்திப்பவர்கள் எல்லோரும் தீவிரவாதத்திற்கு எதிரானவா்கள்தான்.
நான் எனது நாட்டிற்காக வியா்வை சிந்தி விளையாடி வருகிறேன். இதைத்தான் நான் என் நாட்டிற்கு நான் செய்யும் சேவையாக கருதுகிறேன். வீரமரணமடைந்த வீரா்களுக்கும், வீரா்களின் குடும்பங்களுக்கும் நான் நிச்சயம் துணையாக இருப்பேன். தாக்குதல் நடத்தப்பட்ட பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம். இந்த நாளை யாரும் மறக்க முடியாது. மீண்டும் இதுபோன்ற ஒரு நாள் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். தற்போதும் அமைதிக்காக செய்கிறேன்' என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.