சங்குசக்கரம்: குழந்தைகள் கொண்டாடும் சிரிப்புச்சக்கரம்
தமிழில் மைடியர் குட்டிச்சாத்தான் படத்தி'ற்கு பின்னர் முழுக்க முழுக்க குழந்தைகள் வயிறு வலிக்க சிரித்து ரசிக்கும் படம் இத்தனை வருடங்களாக வரவில்லை என்ற நிலையில் அந்த குறையை தீர்த்து வைக்க வெளிவந்திருக்கும் படம் தான் 'சங்குச்சக்கரம்'. இத்தகைய படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
அம்மா, மகள் என இரண்டு பேய்கள் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவிற்குள் விளையாட்டுத்தனமாக நுழைகின்றார்கள் ஏழு குழந்தைகள். இவர்களுடன் தமிழ் என்ற சிறுவனும், இன்னொரு சிறுவனும் தனித்தனியாக அந்த பங்களவிற்குள் செல்கின்றனர். பங்களாவிற்குள் புகுந்த குழந்தைகளை கடத்தி வைத்திருப்பதாக கூறி பணம் பறிக்கும் நோக்கத்துடன் பங்களாவிற்குள் நுழைகிறார் திலீப் சுப்பராயன். தமிழ் என்ற சிறுவனை கொலை செய்தால் தங்களுக்கு ரூ.500 கோடி கிடைக்கும் என்ற நோக்கத்துடன் அதே பங்களாவிற்குள் நுழையும் அந்த சிறுவனின் கார்டியன்கள் இருவர். இதன் பின்னர் பேய்கள் சிறுவர்களை காப்பாற்றியதா? அல்லது சிறுவர்கள் பேய்களை காப்பாற்றினார்களா? என்பது போன்ற அந்த பங்களாவிற்குள் நடக்கும் கூத்துக்கள் தான் மீதிக்கதை
முதலில் இயக்குனர் மாரீசனுக்கு வாழ்த்துக்கள். பொதுவாக பேய்ப்படம் என்றால் இருட்டு தான் பிரதானமாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் பேய்கள் வரும் இடமெல்லாம் வெளிச்சமாகின்றது என்ற ஆரம்ப காட்சிகளில் இருந்தே இந்த படத்தின் வித்தியாசமான கோணம் தெரிகிறது. பேய்கள் என்றால் குழந்தைகள் பயம் வரும் என்றுதான் நாம் அனைவருக்கும் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம். ஆனால் குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு பேய்களை திணறடிக்கும் படத்தை இதுவரை நாம் ஹாலிவுட்டில் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வில்லாத திரைக்கதை அமைத்து முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர். அதுமட்டுமின்றி ஆங்காங்கே தற்போதைய சமூக, அரசியல் நிலைமைகளை வசனத்தின் மூலம் நையாண்டியும் செய்துள்ளார். இதற்கு 'பணம் நிரந்தரம் இல்லைன்னு சொன்னவன் எவனும் உயிரோட இல்லை, ஆனால் பணம் நிரந்தரமா இருக்குது; வாய்ப்புக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பே கிடையாது; தனியார் பள்ளியில படிக்கிற பசங்களா? அப்ப பெத்தவங்களோட மொத்த பணத்தை அப்படியே உருவியிருப்பாங்களே' போன்ற வசனங்கள் உதாரணம். தன்னை கொல்ல வரும் பேயை பார்த்து 'நீ என்னை கொன்றுவிட்டால் நானும் பேயாக மாறி உன்னை கொடுமைப்படுத்துவேன்' என்று ஒரு சிறுவன் கேட்டதும் பேயே அசந்துவிடுகிறது. இறுதியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியையும் குழந்தை மூலம் கேட்க வைத்திருப்பது நையாண்டியின் உச்சக்கட்டம்
ஆகாயம் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் திலீப் சுப்பராயன் இனிமேல் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமின்றி நகைச்சுவை கேரக்டரிலும் தாராளமாக நடிக்கலாம். உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை இவருக்கு இயல்பாக வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள ஒன்பது குட்டீஸ்கள் தான் ஹீரோ, ஹீரோயின்கள். குறிப்பாக தமிழ் கேரக்டரில் நடித்திருக்கும் நிஷேஷ் நடிப்பு அருமை. புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்டு திணறடிப்பது 'பசங்க 2' படத்தை ஞாபகப்படுத்தினாலும் நம்மால் கூட பதில் சொல்ல முடியாத கேள்விகள். குறிப்பாக சாகாவரம் தரும் நெல்லிக்கனியை சாப்பிட்ட அதியமான் ஏன் இறந்தார்? சொர்க்கத்துக்கு போனால் சந்தோஷமாக இருக்கலாமே, அப்புறம் ஏன் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கஷ்டப்படுகிறார்கள், நிறைவேறாத ஆசையோட செத்தவங்க பேயாக மாறுவாங்கன்னா, இந்தியா சுதந்திரம் அடையனுங்கிற ஆசை நிறைவேறாம செத்த சுபாஷ் சந்திரபோஸ் பேயா மாறுனாரா? இனத்துக்காக செத்த எத்தனையோ தலைவர்கள் ஏன் பேயா வரல்ல? தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு பேசறவங்க இறந்துபோய் பேயானா, அதே மொழியில பேசுவாங்களா? இல்ல பேய்களுக்குன்னு ஒரு காமன் மொழி இருக்கா? போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது
மேலும் பெரிய பேயாக வரும் 'புன்னகைபூவே கீதா', மலர் என்ற குழந்தை பேயாக வரும் மோனிக்கா, என அத்தனை பேரின் நடிப்பிலும் குறைகாண முடியவில்லை
ஷபீரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ரவிகண்ணனின் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு, பேய் பங்களாவினுள் அசர வைக்கும் செட் போட்ட ஜெயச்சந்திரன் ஆகியோர்களின் பணிகள் சிறப்பு. மேலும் இந்த சின்ன பட்ஜெட் படத்தில் பேய்கள் தோன்றும் காட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும் அசர வைக்கின்றன
இந்த படத்தில் குறை என்று சொல்லும் அளவிற்கு ஒருசில லாஜிக் மீறல்களும், ஒருசில காட்சிகளும் இருந்தாலும் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு படைப்பு என்பதால் அதை மறந்துவிடலாம். மொத்தத்தில் வரும் புத்தாண்டு விடுமுறையில் குழந்தைகளுடன் கண்டு ரசிக்க ஒரு அருமையான படம்
Comments