காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்!!! அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர்மேலாண்மை திட்டங்களைக் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்துடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில் தமிழகத்தின் காவிரி ஆறு மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டம், குடிநீர் திட்டம் போன்றவற்றை குறித்து முதல்வர் மத்திய அமைச்சருடன் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதில், தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பருவமழையை நம்பித்தான் தமிழக இருந்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடிமராமத்து போன்ற சமூக பங்களிப்பு நீர் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றி நீர் பாதுகாப்புக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 278 குடிமராமத்து பணிகளை ரூ.1.434 கோடி செலவில் மேற்கொண்டு உள்ளோம் என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், தண்ணீரை சேமிக்க சாத்தியக்கூறு உள்ள இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு ரூ.1,000 கோடி செலவில் இந்த பணிகள் நடந்து வருகிறது. மாநில நிதியின் கீழ் ஏராளமான ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் நெல் கொள்முதல் சாதனையை எட்டியுள்ளது எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் தமிழக அரசின் சில நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. காவிரி-கோதாவரி இணைப்பு திட்டங்களுக்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் கோதாவரி ஆறு, கல்லணை அருகே காவிரி ஆற்றில் சேருவது போன்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை மாயனூர் கதவணையில் சேருவது போன்று அமைக்கவேண்டும் என்று தமிழக அரசு 4.9.2019 அன்று தனது கருத்துகளை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பி இருக்கிறது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
அதைத்தவிர இத்திட்டத்தில் 200 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை செய்வதை விரைவாக முடித்து பணிகளை தொடங்க தேசிய நீர் மேம்பாட்டு முகமையை அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன் எனவும் முதல்வர் கருத்துக் கூறியிருந்தார்.
இதுபோன்று மாநிலத்திற்கு உள்ளேயே காவிரி-குண்டாறு இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இது நதிகள் இணைப்பை மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயார் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு அந்த அறிக்கை இன்னும் அனுப்பப் படவில்லை. அந்த திட்ட அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்ப தேசிய நீர் மேம்பாட்டு முகமையை அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக, காவிரி ஆறு மாசுபடுவதை தடுத்து புத்துயிர் பெறுவதை உறுதி செய்ய ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘வாப்கோஸ்’ என்ற பொதுத்துறை நிறுவனம் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காவிரி விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. காவிரி தமிழகத்தின் வாழ்வாதாரம். எனவே இந்த திட்டத்தை நதிகளை சுத்தப்படுத்தும் திட்டமான நமாமி கங்கா திட்டம் போன்ற ஒரு சிறப்பு திட்டமாக அனுமதிக்கலாம் என்றும் இதை ஒரு தேசிய திட்டமாக செயல்படுத்தலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் முதல்வர் கூறியிருக்கிறார்.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியது. அதன்படி மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவிற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்க முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுவதாகும். எனவே கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டு திட்டத்துக்கான முன்மொழிவை நிராகரிக்க மத்திய நீர் ஆணையம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதேபோன்று நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு எதிராக கர்நாடக அரசு பெண்ணையாறு ஆற்றின் குறுக்கே ஒரு அணைக்கட்டு அமைத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோட்டின் உத்தரவின் அடிப்படையில் மத்திய நீர் ஆணையத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உடனடியாக ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றும் தமிழக முதல்வர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout