படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது எப்படி? அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே!
- IndiaGlitz, [Monday,August 01 2022]
நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஒரு சண்டைக் காட்சிக்காக கிட்டத்தட்ட ஆறு முறை ஒத்திகை பார்த்து தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். எனது முழங்கால் ஒரு புள்ளியில் சற்று விலகி விட்டதால் நான் கீழே விழுந்துவிட்டேன். சில நொடிகளுக்கு பிறகு வலி கடுமையாக இருந்தது. சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனே நான் என்னை நானே தூசி தட்டிக் கொண்டு எழுந்து அடுத்த வேலையைப் பார்ப்பேன். ஆனால் இந்த முறை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.
எனது படக்குழுவினர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினார்கள். மருத்துவர் என்னை பார்த்து பெரிய காயமாக இருக்காது என்று கூறினார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது எலும்புகள் அனைத்தும் நன்றாக இருந்தன. ஆனால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்த போது தசைநார் முற்றிலும் கிழிந்து இருப்பதை மருத்துவர்கள் அறிந்து கொண்டனர்.
இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்று அல்லது நான்கு மாதங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் நான் என் மனதில் கொண்டே அழுதேன்.
இருப்பினும் எனது கால்கள் நடனமாடிய கால்கள், விரைவில் நான் மீண்டு வந்து விடுவேன். எனக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.