எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்.. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து சமுத்திரக்கனி..

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

கடந்த சில நாட்களாக ‘பருத்திவீரன்’ பிரச்சனை குறித்து அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்து கொண்டிருக்கும் நிலையில் அமீருக்கு ஆதரவாக ஏற்கனவே சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ’ஞானவேல் ராஜாவுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது’ என்று சமுத்திரக்கனி ஆவேசமாக கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த அவர் கூறியதாவது:

ஞானவேல் ராஜாவுக்கு... அமீர்‌ அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான்‌ பார்த்தேன்‌. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன்‌ சொல்றேன்னா, அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும்‌ இருந்தவன்‌ நான்‌. எல்லா பிரச்சினையும்‌ எனக்கு தெரியும்‌.

ஆறு மாசம்‌ ‘பருத்திவீரன்‌’ படப்பிடிப்பிலே இருந்துருக்கேன்‌. ஆனா உங்கள ஒருநாள்‌ கூட அங்க பாத்தது இல்ல. நான்தான்‌ தயாரிப்பாளர்‌, நான்தான்‌ தயாரிப்பாளர்னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர்‌ ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன்‌. எந்த நன்றி விஸ்வாசமும்‌ இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர்‌. தப்பில்லையா ?

எங்‌கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்‌?. பருத்திவீரன்‌ சம்பந்தமான பிரச்சினைகள்‌ வரும்போதெல்லாம்‌ சரி நமக்கெதுக்கு, அவங்களே பேசிக்குவாங்க...அவங்களே தீத்துக்குவாங்க, அப்படின்னு தான்‌ நான்‌ இருந்தேன்‌. ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அண்ணன்‌ இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார்‌. எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார்‌னு எனக்கு தான்‌ தெரியும்‌. ஏன்னா கால்வாசி படம்‌ நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால தயாரிக்க முடியாது.. பணம்‌ இல்ல அப்படின்னு. சகோதரர்‌ சூர்யா வந்து “படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர்‌ அண்ணா” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்‌.

அதுக்குப் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும்‌, அமீர்‌ அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள்‌, இப்படி ஒவ்வொருத்தர்‌கிட்டயும்‌ அவர்‌ சொல்லச்சொல்ல போய்‌ ஒரு லட்சம்‌, ஐம்பதாயிரம்‌, ரெண்டு லட்சம்‌ இப்டி வாங்கிட்டு வந்தவன்‌ நான்‌. இது இல்லாம தம்பி சசி கூட‌ கொஞ்சம்‌ பணம்‌ கொடுத்திருக்கான்‌ பிரதர்‌ அந்த படத்துக்கு. ஆல்மோஸ்ட் அம்பது, அறுபது பேர்‌ சேர்ந்து காசு கொடுத்து தான்‌ அந்த படத்தை எடுத்து முடிச்சோம்‌. ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர்‌ சட்டையை போட்டுக்கட்டிங்க. உண்மையிலேயே யார்‌ தயாரிப்பாளர்‌..? சொல்லுங்க. தயாரிப்பாளர்‌ பதவிய அண்ணன்‌ அமீர்‌ உங்களுக்கு விட்டுக்கொடுத்தார்‌.

அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத் தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல. ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர் எதுக்கு இது அப்டியே உட்டுட வேண்டியது தானே நிறுத்துங்க படத்தை அப்படின்னு சொன்னாரு அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா?

“ஆரம்பிச்சுட்டோம். கார்த்தியோட எதிர்காலம் இது. அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன்.. அப்படின்னு சொல்லி செஞ்சார். அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்த படம் வந்துருக்குமா..? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா..? என்ன பேச்சு பேசுறீங்க?ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனைதான் எல்லாருமா சேர்ந்து..!

இப்படி அம்பது அறுபது பேர்ட்ட வாங்குன பணத்துக்குத்தான் நீங்கெல்லாம் சேர்ந்து உக்காந்து கணக்கு கேட்டீங்க. எனக்கே தெரியல. எத்தனை பேர்ட்ட போய்ட்டு வாங்கிட்டு வந்தேன்னு..யார் யார் எவ்ளோ கொடுத்தாங்க-ன்னு சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்- னு பல பேர்கிட்ட கை ஏந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர் அண்ணன். அதுக்கு ஆயிரம் கோடி இல்ல, லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க.

நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்..! செலவு பண்ணது அதுக்கும் மேல… அதெல்லாம் பாவம்… கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது. இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமீர், இயக்குநர் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்போது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைப்பதற்கு சமம்” என பதிவிட்டுள்ளார்.