சமுத்திரக்கனியின் 'ஏமாலி' திரைமுன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், ஜோதிகா நடித்த 'முகவரி' என்ற படத்தை கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் துரை, 18 வருடங்கள் கழித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'ஏமாலி. சமுத்திரக்கனி, அதுல்யா, சாம் ஜோன்ஸ், ரோஷினி, பாலசரவணன், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ரதிஷ் கண்ணா, பிரகாஷ் ஒளிப்பதிவில், சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். லதா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது
இந்த படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இருப்பதாகவும், நான்கு கதைகளிலும் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ் நான்கு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளதாகவும், இந்த நான்கு கதையின் கேரக்டர்களும் ஒரு புள்ளியில் இணையும் வகையில் கிளைமாக்ஸ் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.
மேலும் இந்த படம் இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி பார்க்கிறார்கள் என்பதை ஆபாசம் இல்லாமல் பக்குவமாகவும், புதுமையாகவும் தான் கூறியிருப்பதாகவும், தன்னுடைய இந்த பாணியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.
மேலும் சமுத்திகனி என்றால் விரைப்பாக அறிவுரை சொல்லும் பாத்திரங்களில் தான் நடிப்பார் என்ற இமேஜை மாற்றும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக கூறிய இயக்குனர், முதல் படத்திலேயே நான்கு கேரக்டர் ஏற்று பெரிய சுமையை ஏற்றிருந்தாலும் சாம் ஜோன்ஸ் அதை சரியாக கையாண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 'ஏமாளி' என்ற தலைப்பிற்கு பதிலாக 'ஏமாலி' என்ற தலைப்பு வைத்துள்ளது குறித்து பலர் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கான பதில் படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் நடிகை அதுல்யா ரவி சிகரெட் பிடிப்பதாகவும், கிளாமராக தோன்றியுள்ளது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து அவர் கூறியபோது, 'இந்தப் படத்தில் நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி பாடி லாங்வேஜ் எல்லாம் வொர்க் பண்ணினேன். டீசர், ட்ரெயிலரை பார்த்துவிட்டு படத்தில் நான் கிளாமராக நடித்திருக்கிறேன் என்று நினைத்தால் அது தப்பு. இந்தப் படத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் மேல் பெரிய நம்பிக்கை இருக்கு. என் கேரக்டர் எல்லோருக்கும் பிடிக்கும். நான் இந்த கேரக்டர் செய்ய பயந்த போது துரை சார், 'உங்கள் உழைப்பை மட்டும் கொடுங்க போதும்''னு என்னை மோட்டிவேட் பண்ணினார். இந்தப் படத்துக்குள்ளே நான் வந்தற்கு அவர்தான் முக்கிய காரணம்.
டீசர், டிரைலர் வெளியான பின்னர் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது அந்த எதிர்பார்ப்பு படத்திலும் இருக்குமா? என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments