விவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

தமிழ் திரையுலகில் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இன்று வெளியாகியுள்ள ஜெயம் ரவியின் ’பூமி’ திரைப்படம் கூட விவசாயம் குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமுத்திரக்கனி நடித்த மற்றொரு விவசாயம் சம்பந்தப்பட்ட திரைப்படம்தான் ’வெள்ளையானை’. இந்த திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் பல்வேறு பொருள்களை விளைவித்து அவர்களுக்குள் பண்டமாற்றம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதை உடைப்பது போல் அங்கு ஒரு கார்ப்பரேட் வங்கி வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அந்த விவசாயிகளை கடனாளியாகி ஊரை விட்டே துரத்த வைப்பதும், அதில் இருந்து அந்த கிராமம் எப்படி மீண்டது என்பதுதான் இந்த படத்தின் கதை போல் ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

வழக்கம்போல் சமுத்திரகனியின் தனது அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளார். சமுத்திரக்கனியுடன் இணைந்து யோகி பாபு உள்பட மற்ற நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனி, ஆத்மியா, யோகிபாபு, ராமதாஸ், மூர்த்தி, ஸ்டான்லி பாவா செல்லத்துரை உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.