என் நண்பன் நிச்சயம் ஜெயித்துவிடுவான்: சமுத்திரக்கனி தேர்தல் பரப்புரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளை ஆதரித்து திரையுலகினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கட்சி-கூட்டணி என்ற வகையில் இல்லாமல் தனது நண்பனுக்காக நடிகர் சமுத்திரக்கனி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆம், மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனி இன்று பிரச்சாரம் செய்தார்.

வெங்கடேசன் ஒரு அற்புதமான மனிதர் என்றும், இப்படி ஒரு மனிதரை மதுரை மக்கள் எம்பியாக தேர்ந்தெடுத்தால் மதுரைக்கு மிகப்பெரிய மாற்றமும், அடுத்த தலைமுறையும் கட்டாயம் மலரும் என்று பேசிய சமுத்திரக்கனி, வெறும் பணத்தை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது என்றும், நேர்மை, உண்மை இருக்க வேண்டும் என்றும் அது வெங்கடேசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகவும் கூறினார்.

மேலும் வெங்கடேசனுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் குறித்து தான் எந்த குறையும் சொல்ல விரும்பவில்லை என்றும், நம்ம ஆதரிப்பவர்களை வரவேற்றால் அது போதும், அவர்கள் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்றும் தேர்தல் பரப்புரையில் சமுத்திரக்கனி தெரிவித்தார்.