சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்?
- IndiaGlitz, [Sunday,July 17 2016]
கடந்த 1ஆம் தேதி வெளியான சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கருத்து உலகில் உள்ள எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தும் என்பதால் இந்த படம் நியாயமாக உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் அல்லது டப்பிங் செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. இந்நிலையில் இந்த படத்தை ஒருசில இந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றது.
ஏற்கனவே இந்த படத்தின் கன்னட மற்றும் இந்தி ரீமேக் குறித்த செய்திகள் வெளிவந்தது என்பதை பார்த்தோம். தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லாலுடன் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமுத்திரக்கனி, ஜெயம் ரவி நடிக்கும் படமான 'தொண்டன்' படத்தை ஆரம்பிக்கும் பணியில் தீவிரமாக உள்ளதாகவும், மிக விரைவில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சசிகுமாருடன் ஒரு படத்தில் இணைய முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.