ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.1.10 கோடி சம்பளம்?
- IndiaGlitz, [Thursday,January 06 2022]
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையைத் தொடர்ந்து இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தகவல் ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான டெக் நிறுவனங்கள் இந்திய ஐடி மாணவர்களுக்கு எப்போதும் அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் புவனேஸ்வர் ஐடி கல்வி நிலையத்தில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆன்லைன் டாக்ஸி சேவை மையமான “ஊபர்“ 2,74,250 டாலர் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தது. இந்திய மதிப்பில் இது 2 கோடியைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாட்னாவை சேர்ந்த ஐடி மாணவி சம்ப்ரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பாட்னா நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் 2021 மே மாதம் டெல்லி டெக்னாலஜி கல்லூரியில் பிடெக் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தற்போது 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட சம்ப்ரீத்தி யாதவ் தற்போது ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்டதாக இந்த நேர்காணல் இருந்தது என்று சம்ப்ரீத்தி தெரிவித்து இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.