மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை.. சமந்தா கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகள்..!
- IndiaGlitz, [Wednesday,July 03 2024]
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகைக்கு சமந்தா கூறிய தன்னம்பிக்கையான வார்த்தைகள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் இந்த நோயால் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும் எப்படியும் இந்த நோயிலிருந்து நான் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹினா கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பாலிவுட் திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் ’நீங்கள் ஒரு போராளி, உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்த ஹினாகான், ‘நீங்கள் மிகப்பெரிய நட்சத்திரம் என்பது எனக்கு தெரியும், வாழ்க்கையில் உங்கள் மீது வீசப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டது, உங்களுடைய அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை சமந்தாவும் மயோசிட்டிஸ் என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு அதன் பின் அந்த நோயுடன் போராடி முழுமையாக குணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.