உங்கள் அரசியல் சண்டையில் என்னை இழுக்க வேண்டாம்: அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி..!
- IndiaGlitz, [Thursday,October 03 2024]
தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா என்பவர் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் முன்னாள் அமைச்சர் கே டி ராமராவ் ஆகிய இருவரையும் இணைத்து, தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு பெண்ணாக இருப்பது, வேலை செய்வது, சாதிக்க முடியாத துறையில் சாதிப்பது, காதலில் விழுவது, காதலில் இருந்து விலகுவது, இந்த நொடி கூட போராட்டத்துடன் வாழ்வது சாதாரண விஷயம் இல்லை. தைரியம் மற்றும் வலிமை இருந்தால் தான் இதெல்லாம் சாத்தியமாகும். அமைச்சர் சுரேகா என்னுடைய வாழ்க்கைப் பயணத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். இந்த திரை பயணம் என்னை மாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். தயவுசெய்து என்னுடைய பயணத்தை சிறுமைப்படுத்த வேண்டாம்.
ஒரு அமைச்சராக, உங்கள் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு மற்றும் மரியாதை இருப்பதாக நீங்கள் உணர்ந்து இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர்களின் தனி உரிமைக்கு மதிப்பளித்து பேசுங்கள். பொறுப்பாகவும், மரியாதை உடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது விவாகரத்து என்னுடைய தனிப்பட்ட விஷயம்; அதைப் பற்றி பொதுவெளியில் பேசுவதை தவிர்க்கவும். எங்கள் தனிப்பட்ட விஷயங்களை தனிப்பட்டதாக வைத்திருப்பதே எங்களுக்கு விருப்பம். அதில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி, சர்ச்சையை பரப்பலாம் என்று நினைக்க வேண்டாம்.
எங்களது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது; இதில் எந்த அரசியல் தலையீடு எதுவும் இல்லை. தயவுசெய்து உங்கள் அரசியல் சண்டையில் என்னுடைய பெயரை பயன்படுத்தாமல் விலகி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்; அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன், என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.