விஜய் பட இயக்குனரிடம் சமந்தா வைத்த வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா கையில் தற்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளது. அவருக்கும் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவர் ஆறு படங்களையும் முடித்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சமந்தா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தனது நடிப்பை தொடரவுள்ளதாகவும், ஆனாலும் திருமணம், தேனிலவு என இடையில் சில காலம் அவர் பிரேக் எடுத்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். எனவே ஒருசில படங்களில் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்துவிடுமாறு இயக்குனர்களிடம் சமந்தா தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இளையதளபதி விஜய்யின் 'தளபதி 61' படத்தை இயக்கிவரும் அட்லியிடம் தனது பகுதி காட்சிகளை விரைவில் முடிக்குமாறு சமந்தா கேட்டுக்கொண்டாராம். இதனால் அடுத்த மாதம் சென்னையில் விஜய்,சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். அதேபோல் ராம்சரண்தேஜாவுடன் நடிக்கும் படமும் வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் திருமணம், தேனிலவு முடிந்தவுடன் நவம்பருக்கு பின்னர் மீண்டும் திரும்பும் சமந்தா, சாவித்ரி வாழ்க்கை வரலாறு படம், அநீதி கதைகள், இரும்புத்திரை உள்பட மற்ற படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.