சமந்தாவை சிறையில் அடையுங்கள்.. மருத்துவரின் ஆவேசமான பதிவும், சமந்தாவின் விளக்கமும்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பயன்படுத்திய மருத்துவ முறை, சிகிச்சை குறித்து பதிவு செய்த நிலையில், அந்த பதிவுக்கு மருத்துவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஒரு பொதுவான மருந்து எடுத்துக் கொள்வதற்கு பதில் ஒரு மாற்று வழியை முயற்சித்து பாருங்கள் என்று ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையை நெபுலைஸர் செய்வது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவுதான் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் மருத்துவர் ஒருவர் சமந்தாவின் இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ;இது போன்று யாரும் செய்ய வேண்டாம், அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இந்த நடிகைக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து சமந்தா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ;நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்திய, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை படி சுய ஆய்வுக்கு பின் எடுத்துக்கொண்ட மருந்துகளை தான் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நான் எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் மிகவும் விலை உயர்ந்தது, என்னால் அந்த சிகிச்சை பெற முடிந்த நிலையில் அனைவராலும் பெற முடியாது.

மேலும் நான் மேற்கொண்ட சிகிச்சைகள் எனக்கு கை கொடுக்கவில்லை, விலை உயர்ந்த சிகிச்சைகள் கைகொடுக்காததால் மாற்று சிகிச்சையை நோக்கி நகர எனக்கு வழி கிடைத்தது. சில பரிசோதனைகளுக்கு பிறகு நான் பயன்படுத்திய மருத்துவ சிகிச்சையை தான் அதில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அதே நேரத்தில் அந்த சிகிச்சை நான் வலுவாக பரிந்துரைக்கவில்லை,.

நான் இரண்டு ஆண்டுகளாக கற்றுக் கொண்டதன் அடிப்படையில் நல்ல நோக்கத்துக்காக அந்த பதிவை செய்திருந்தேன். என்னுடைய பதிவை தவறாக சித்தரித்து கருத்துக்கள் பகிரப்பட்டது என்பதை அறிந்தேன். ஒரு மருத்துவர் என்னுடைய கருத்து குறித்து குறிப்பிட்டதையும் பார்த்தேன். அவர் கண்டிப்பாக என்னை விட அதிகம் அறிந்திருப்பார் என்பதையும் சந்தேகம் இல்லை. ஆனால் கனிவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்பதுதான் வருத்தம். குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று பரிந்துரைத்து இருப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் பிரபலமாக இருப்பது தான் இப்படியான கருத்துக்கள் வருகிறது என்று நினைக்கிறேன். சிகிச்சை தேவைப்பட்டோருக்கு தான் அதனை பதிவு செய்தேனே, தவிர பணம் ஈட்டும் தவறான நோக்கம் எனக்கு இல்லை, நான் பெற்ற சிகிச்சையின் அனுபவத்திலிருந்து அந்த பதிவை செய்தேன், மேலும் அதை ஒரு ஆப்ஷனாக தான் தெரிவித்தேன், எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இரு வேறு நிலைப்பாடுகள் இருக்கும், இதனை கண்டறிவது கடினமானது’ என்று சமந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.