கிரிக்கெட் அணி உரிமையாளராகும்  கீர்த்தி சுரேஷ்.. சமந்தாவும் ஒரு அணி உரிமையாளர்..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் விளையாட்டுத் துறையில் களம் இறங்கி இருப்பதாகவும் அவர்கள் விளையாட்டு அணிகளை சொந்தமாக்கி இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் விரைவில் கேரளா லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது என்பது தெரிந்தது. இந்த போட்டிக்கான விளம்பர தூதராக மோகன்லால் இருக்கும் நிலையில் இந்த போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ளும் என்றும் 33 போட்டிகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்று திருவனந்தபுரம் அணி. இந்த அணியின் உரிமையாளராக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதே போல் World Pickleball League என்ற தொடரின் சென்னை அணிக்கு சமந்தா உரிமையாளர் ஆகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’சிறுவயது முதலே எனக்கு Pickleball விளையாட்டு மிகவும் பிடிக்கும், இந்த தொடரின் சென்னை அணியின் உரிமையாளராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

விளையாட்டு துறையில் பெண்கள் சமீப காலத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் நான் இந்தியாவின் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டு சூழலின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நிறைய இளம் பெண்களை Pickleball விளையாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தன்னுடைய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் World Pickleball League தொடர் நடைபெற உள்ளது என்பதும் இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சென்னை அணியின் உரிமையாளர் ஆகியுள்ள சமந்தாவுக்கு விளையாட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.