சலூன் கடை திறக்க அனுமதி இல்லை: விரக்தியில் தூக்கில் தொங்கிய சலூன் கடைக்காரர்
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனிலும் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டதோடு நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சலூன் கடைகள் மட்டும் திறப்பதற்கு தமிழக அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முடிவெட்டாமல் இருக்கும் பொதுமக்கள் பலர் தாங்களாகவே முடிவெட்டி கொண்டிருக்கின்றனர்.
சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்காததால் சலூன் கடைகாரர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி இருக்கும் சலூன் கடைக்காரர்கள் எப்போது கடை திறக்க அனுமதி கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்
இந்த நிலையில் தமிழக அரசு சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்பதை அறிந்து வருமானமின்றி மன உளைச்சலுக்கு ஆளான பரணி என்ற சலூன் கடைக்காரர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று சலூன் கடைக்காரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்