இங்கேதான் பிறந்தேன்... 25 ஆண்டுகளாக இருக்கிறேன்... குடியுரிமை கேள்விக்குறியானதால் கருணைக் கொலை செய்ய இளைஞர் மனு.
- IndiaGlitz, [Monday,December 16 2019]
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் எரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன் என்ற பட்டதாரி வாலிபர், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தன்னை கருணைக் கொலை செய்திடுமாறு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் கோரிக்கை மனுவை செலுத்தினார்.
அந்த மனுவில், தனது தாய் தந்தை கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையில் இனப்போர் நடந்ததன் காரணமாக இந்தியாவிற்கு வந்ததாகவும், அப்போது முதல் சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் இருந்து வந்த நிலையில், கடந்த 1991-ம் ஆண்டு தான் பிறந்ததாகவும், அன்று முதல் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்று இங்கேயே வாழ்ந்து வரும் தங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத வகையில் தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள திருத்த மசோதா உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே தன்னை கருணைக் கொலை செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் பிறந்து, இந்தியாவிலேயே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தனக்கு குடியரிமை மறுக்கப்பட்டு உள்ளது மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், இந்த நிலை எனது சந்ததியருக்கும் வர கூடாது என்பதற்காக தன்னை கருணைக் கொலை செய்திட கோரிக்கை விடுத்து உள்ளதாகவும், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமல்லாமல், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய குடியரசு தலைவருக்கும் கோரிக்கை மனு அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால், மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான இலங்கை தமிழரான பட்டதாரி இளைஞர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்திட மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.