ஆபாச படமெடுத்து மிரட்டிய ரெளடி கும்பல்: என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த ரெளடியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலத்தில் சமீபத்தில் தனியாக நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை மிரட்டி அழைத்து சென்ற நான்கு பேர் கொண்ட ரெளடி கும்பல் அந்த பெண்ணை ஆபாச படமெடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் விசாரணையில் இந்த நான்கு பேர்களுக்கு பின்னணியில் ஒரு பெரிய ரெளடிக்கும்பல் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணையில் வீடியோ எடுத்து மிரட்டும் கும்பலில் பிரபல ரெளடிகள் காட்டூர் ஆனந்தன், கதிர்வேல் ஆகியோர் இருப்பது முறுக்கு வியாபாரி கணேசன் கொடுத்த தகவலின் பேரில் தெரிய வந்தது. ஆனால் கணேசனை, ஆனந்தன், கதிர்வேல் கும்பல் கொலை செய்ததால் இந்த வழக்கை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதனையடுத்து ரெளடிகளை பிடிக்க தீவிரமடைந்த போலீசார் திருவண்ணாமலையை அடுத்த செங்கம் அருகே ஆனந்தன், கதிர்வேல் உள்பட நான்கு பேர் இருப்பதை அறிந்து அவர்களை சுற்றி வளைத்தனர். நான்கு பேர்களையும் கைது செய்த போலீசார் அவர்களை ஆயுதங்கள் பதுக்கி வைத்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றவுடன் புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்த நான்கு பேர்களும், திடீரென ஆயுதங்களால் தாக்க தொடங்கினர். இதில் இரண்டு போலீஸ் படுகாயம் அடைந்ததை அடுத்து ரெளடி கதிர்வேலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த பரபரப்பான சூழலை பயன்படுத்தி மற்ற மூன்று ரெளடிகளும் தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கூறுகையில், 'சுட்டுக்கொல்லப்பட்ட கதிர்வேல் மீது ஒரு கொலை வழக்கு, மூன்று கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் ஆகியவைகள் உள்ளதாகவும், காவல்துறையினர் தற்காப்புக்காகவே கதிர்வேலை சுட்டதாகவும், மற்றவை விசாரணையில்தான் தெரிய வரும் என்றும் கூறினார்.

இந்த என்கவுண்டர் சம்பவதால் தமிழகம் முழுவதிலும் உள்ள ரெளடிகள் கும்பல் பதட்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது