பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சக்தி

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சக்தி, தற்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து தனது தவறை உணர்ந்திருப்பார் போல் தெரிகிறது. குறிப்பாக ஓவியாவை சக்தி அடிக்க போன விவகாரம் தொடர்பாக ஓவியா ஆர்மியினர்களின் டுவீட்டுக்கள் சக்திக்கு பல விஷயங்களை புரிய வைத்துள்ளது.

இந்த நிலையில் சக்தி தனது சமூக வலைத்தளத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்த சக்தி 'பெண்களுக்கு எதிராக ஏதாவது கருத்தை தான் தெரிந்தோ தெரியாமலோ கூறியிருந்தால் அதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். தான் எந்த நிலையில் பெண்களுக்கு எதிரான நிலையை எடுத்ததில்லை என்றும், பெண்களுக்கு என்றும் ஆதரவு கொடுக்கும் ஒரு நபராகவே தான் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீடு தனது பல புதிய அனுபவங்களை தந்ததாக கூறும் சக்தி, தினமும் ஒன்றரை மணி நேரம் மட்டும் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் இதன் மூலம் மட்டுமே யார் நல்லவர்? அல்லது யார் கெட்டவர் என்பதை முடிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்தில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ள அவர், தனக்கு எதிரான சூழ்நிலையை சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல தான் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதுதான் தனக்கு ரியல் கேம் ஆரம்பித்துள்ளதாகவும், இதற்காக விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் உள்பட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சக்தி, பின்னர் திடீரென சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.