இந்தியா சீனா மோதல் எதிரொலி: டிக்டாக்கில் இருந்து விலகிய பிக்பாஸ் தமிழ் நடிகை!
- IndiaGlitz, [Sunday,June 21 2020]
இந்திய எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் சீனாவைச் சேர்ந்த 43 வீரர்கள் மரணமடைந்ததாக கூறப்பட்டாலும் சீனாவின் அத்துமீறல் தான் இந்திய வீரர்களில் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. சீன செயலிகளை பயன்படுத்த மாட்டோம் என்றும், சீன பொருட்களை இனிமேல் வாங்க மாட்டோம் என்று பெரும்பாலான இந்தியரக்ள் கூறி வருகின்றனர். ஒரு சிலர் ஆவேசம் காரணமாக சில பொருட்களை தெருவில் உடைத்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகையும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால், சீன செயலியான டிக்டாக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிக்டாக்கில் அவருக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்த போதிலும், தான் ஒரு இந்திய குடிமகளாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிக்டாக்கில் இருந்து விலகுவதாகவும், சீனாவின் பொருட்களை இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்றும், சீன பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா அமைதிக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நாடு என்றும் ஆனால் அதனை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நமக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும் சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார். சாக்ஷி அகர்வாலின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.