Sakka Podu Podu Raja Review
சக்க போடு போடு ராஜா - காதல் நாயகனாக சந்தானம்
அறிமுக இயக்குனர் சேதுராமன் அதிர்ஷ்டமானவர் என்றே கூறவேண்டும் ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த சந்தானம் இசையமைப்பாளராக சிம்பு அறிமுகம் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு கதை மற்றும் வி டி வி கணேஷின் அதிக பொருட்ச்செலவில் தயாரிப்பு. படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
படத்தின் ஆரம்பத்தில் சந்தானம் ரவுடி சம்பத்தின் தங்கை பாப்ரி கோஷை கடத்தி அவர் காதலருடன் சேர்த்து வைத்துவிட்டு பெங்களூருக்கு தப்பி செல்கிறார். போன இடத்தில திமிர் பிடித்த கல்லூரி மாணவி வைபவியை கண்டதும் காதல் கொள்கிறார் அவரிடம் என்கவுண்டர் போலீசாக நடித்து ஏமாற்றுகிறார். அவரும் ஒரு ரௌடியின் தங்கை தான் என்பதால் முதலில் பயந்து பின் உண்மை தெரிந்து அவரும் காதலில் விழுகிறார். சென்னையிலிருந்து சம்பத் சந்தானம் பேசி வாய்த்த கால் டாக்ஸி டிரைவர் விவேக்குடன் பெங்களூரு வர அங்கே பல திருப்பங்கள் நிகழ்கிறது. கடைசியில் சந்தானம் இரண்டு ரௌடிகளிடமிருந்து எப்படி தப்பித்து தன் சாமர்த்தியத்த்தின் மூலம் நாயகியை கை பிடிக்கிறார் என்பதே மீதி கதை.
ரொமான்டிக் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம் காதல் காட்சிகளிலும் நடனத்திலும் சண்டையிலும் அசத்தி விடுகிறார். காமிராவை பார்த்து பஞ்ச் பேசுவதிலும் பின் ஸ்லோ மோஷனில் நடப்பதிலும் தான் சற்று பதற்றம் தென் படுகிறது (காமெடியனாக அவர் இருந்தபொழுது இப்படி இல்லை) சாதாரண ரசிகனுக்கு சற்றே ஏமாற்றம் என்னவென்றால் படத்தில் சந்தானம் ஹீரோவாக மட்டும் செயல்பட்டு காமடி களத்தை மற்றவர்களிடம் விட்டு விடுகிறார். கதாநாயகி வைபவி காலேஜில் சக மாணவனை துன்புறுத்துவதிலிருந்து சந்தானத்தை கவர அவர் எடுக்கும் முயற்சி அப்புறம் திடீர் காதல் என்பது வரை வலுவில்லாத ஒரு கதாபாத்திரமாகவே தெரிகிறார். நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் வந்தும் பாடல் காட்சிகளில் தாராளம்காட்டியும் இளசுகளை ஏமாற்றவில்லை என்பதே ஆறுதல். விவேக் படத்தின் மிக பெரிய பலம் சந்தானத்தின் ஒவ்வொரு திட்டத்தையும் வில்லன் சம்பத் நம்புவது பார்த்து வெம்புவதும் தன் மனைவி வி டி வி கணேஷின் மனைவியாக நடிக்கும்போது பொருமுவதும் நன்றாக சிரிக்க வைக்கிறார். அவரை போலவே சந்தானத்தின் அப்பாவாக வரும் வி டி வி கணேஷும் பல இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ரோபோ ஷங்கர் லோகேஷ் மயில்சுவாமி சுவாமிநாதன் நாராயணன் லக்கி மற்றும் தொலைக்காட்சி காமடி நடிகர்கள் பலர் இருந்தும் ஓரளவுக்கே காமடி ஒர்க் அவுட் ஆகிறது. சம்பத்துக்கு தன் ரௌடி கதாபாத்திரத்தை சீரியஸாக செய்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் படம் பார்க்கும் நமக்கே தெரிந்து விடுகிறது.
சக்க போடு போடு ராஜாவின் திரைக்கதை எதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும் வேகமாக செல்வதாலும் அடிக்கடி திருப்பங்கள் வருவதாலும் பார்க்கும்படியாக இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் கடைசியில் சந்தானம் வீட்டில் கூடும்போது வி டி வி கணேஷ் மற்றும் விவேக்கின் புண்ணியத்தால் குபீர் சிரிப்பும் வருவது மறுப்பதற்கில்லை.
குறைகள் என்று பார்த்தால் முதலில் தெலுங்கு கதையை அதே வாடையுடன் தந்திருப்பது பெரிய மைனஸ். சம்பத்தும் விவேக்கும் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமல் ஒரே காரில் பயணிக்கும்போது மிரள வைக்கவும் சிரிக்க வைக்கவும் எவ்வளவோ இடமிருந்ததும் அதை இயக்குனர் பயன் படுத்தவில்லை இதை போல் பல திருப்பங்கள் நமத்து போகின்றன. இன்னொரு வில்லன் ஷரத் திடீரென்று தோன்றுவதும் சம்பத்தையும் அவர் தங்கைகளையும் பழி வாங்க அவர் சொல்லும் காரணங்களும் படு அபத்தம்.
இசையமைப்பாளராக சிம்பு முதல் படத்திலேயே முதல் மார்க் வாங்கியிருக்கிறார். ஹீரோ அறிமுக பாடல் கலக்கு மச்சான் மற்றும் தேவதை பாடல்கள் கவர்கின்றன மற்ற பாடல்கள் ஒரே பாணியில் இருந்தாலும் கேட்க வைக்கின்றன. பின்னணியிலும் படத்தின் போக்கை வெகுவாக காப்பாற்றியிருக்கிறார் எஸ் டி ஆர் காமிரா எடிட்டிங் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் முதல் தரம். வி டி வி கணேஷ் அதிக பொருட்ச்செலவில் தயாரித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சேதுராமன் லௌக்கியம் படத்தை தமிழ்படுத்தியதிலும் நடிகர்களை கையாண்டதிலும் கோட்டை விட்டிருக்கிறார்.
சந்தானத்தின் ரசிகர்களுக்கு சக்க போடு போடு ராஜா பிடிக்கும்
- Read in English