சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஊடகங்களை எச்சரித்த நடிகை சாய் பல்லவி..!

  • IndiaGlitz, [Thursday,December 12 2024]

தன்னை பற்றி பொய்யான மற்றும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டால் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படத்தில் நாயகி ஆக சாய் பல்லவி நடித்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக சாய்பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்கள் குவித்தது என்பதும் தெரிந்தது. மேலும் அவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக சாய்பல்லவி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் அசைவம் கூட சாப்பிடுவதில்லை என்றும் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அது மட்டுமின்றி ஹோட்டல்களில் கூட சாப்பிடாமல் அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் சமையல்காரர்களை கூடவே அழைத்துச் செல்வதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள சாய் பல்லவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நோக்கத்துடன் அல்லது நோக்கமில்லாமல் வெளியாகும் இதுபோன்ற ஆதாரமற்ற புரளிகளுக்கும் பொய்களுக்கும் தவறான கூற்றுகளுக்கும் நான் எப்போதும் அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இனிமேல் என்னை பற்றி கட்டுக்கதைகள், புரளிகளை எந்த ஒரு ஊடகமும் பரப்பினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று எச்சரிக்கையுடன் கூறியுள்ளார். சாய் பல்லவியின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.