ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க முடியாது என கூறிய சாய் பல்லவி.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க விளம்பர நிறுவனம் ஒன்று முன் வந்த போதிலும் அதில் நடிக்க முடியாது என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பிரபலங்கள் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் அந்த விளம்பரத்தினால் பயனாளிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தாலும் பணத்திற்காக பலர் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பான்பராக் உள்ளிட்ட விளம்பரங்களில் கூட நடித்து வருவது முழுக்க முழுக்க பணத்திற்காகவே என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியிடம் அழகு சாதன நிறுவனம் ஒன்று தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்றும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என சாய்பல்லவி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சாய் பல்லவி அடிப்படையில் ஒரு டாக்டர் என்பது மட்டுமின்றி அவர் மேக்கப்பை விரும்பாதவர் என்றும் திரைப்படங்களில் நடிக்கும் போது கூட லேசான மேக்கப் மட்டும் தான் போடுவார் என்றும் அழகு சாதன பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு டாக்டராக அவர் அறிந்திருப்பதால் தன்னால் இந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பணம் கிடைத்தால் போதும் எந்த விளம்பரத்தில் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று கூறப்படும் நடிகர் நடிகைகள் மத்தியில் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க முடியாது என சாய் பல்லவி கூறியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.