குற்றம் கடிதல்- திரை விமர்சனம்

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

முற்றிலும் புதியவர்களைக் கொண்ட குழுவிடமிருந்து வந்திருக்கு படம் குற்றம் கடிதல்'. சிறந்த தமிழிப் படத்துக்கான தேசிய விருதையும் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்துவிட்டு உள்ளூர் ரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது. தரமான படங்களை தயாரித்து வெளியிட்டுவரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தை

வெளியிட்டிருக்கிறது. படம் பார்வையாளர்களுக்கு தருவது என்ன?

திருமணத்துக்குப் பின் முதல் நாள் வேலைக்கு வருகிறாள் தனியார் பள்ளி ஆசிரியை மெர்லின் (ராதிகா பிரசித்தா). அவளது காதல் கணவன் மணிகண்டன் (சாய் ராஜ்குமார்) மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். பள்ளித் தாளாளர் (குலோத்துங்கன்) மற்றும் மூத்த ஆரிசியையாக இருக்கும அவரது மனைவி மெர்லினின் நலம் விரும்பிகள்.

மறுபுறம் அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சுட்டி மாணவன் செழியன். அவனது விதவைத் தாய் (சத்யா) பிழைப்புக்கு ஆட்டோ ஓட்டுகிறார். ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி சிந்தனையாளரும் போராளியுமான உதயன் (பாவல் நவகீதன்) செழியனின் மாமா.

செழியன் செய்யும் ஒரு தவறை விசாரிக்கும்போது அவன் கூறும் பதிலால் ஆத்திரமடையும் மெர்லின் அவன் கன்னத்தில் ஒரு அறைவிட அவன் மயங்கி விழுகிறான். உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

இந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு செழியன்,மெர்லின் மற்றும அவர்கள் இருவர் மீது அக்கறை கொண்ட மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

அறிமுக இயக்குனர் பிரம்மா பள்ளிகளில் நிகழக்கூடிய ஒரு சம்பவம் அல்லது விபத்தை கதைக் கருவாக எடுத்துக் கொண்டு அது பல்வேறு தரப்பினர் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவன், அவனது பெற்றோர், உறவினர்கள், தெரியாமல் தவறு செய்துவிட்ட ஆசிரியை, பள்ளியின் அன்றாட செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள், பள்ளி நிர்வாகம், பொதுமக்கள், ஊடகம், காவல்துறை என அனைத்து தரப்புகளையும் அவற்றுக்கான நியாயங்களுடன் முன்வைத்திருக்கிறார். யாரையும் குற்றவாளியாக்கவில்லை. இந்த அமசமே குற்றம் கடிதல் படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது.

அதே சமயம் பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்ப்பது, உடல் ரீதியான தண்டனைகளைத் தவிர்ப்பது ஆகிய கோரிக்கைகள பிரச்சார நெடியின்றி முன்வைக்கிறார். சில ஊடகங்கள் தீர ஆராயமல் ஒரு தரப்பைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி பொதுக் கருத்தை உருவாக்க முனைவதையும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களை செய்தி சேகரிப்பதற்கான கருவிகளாகப் பார்ப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பொதுமக்களில் பலர் ஒரு சம்பவம் அல்லது பிரச்சனை குறித்து பார்ப்பவற்றையும் கேட்பவற்றையும் வைத்து ஊகத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவைக்கும் பதட்டம் குறித்து எச்சரிக்கிறார்.

இந்த சிறப்பம்சங்களோடு மகனின் உயிரைக் காக்கப் போராடும் தாய் மற்றும் தெரியாமல் செய்த குற்றத்துக்காக குற்ற உணர்வில் தவிக்கும் ஆசிரியை ஆகிய இரண்டு பெண்களுக்கிடையிலான உணர்ச்சிப் புர்வமான கதையாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். இறுதித் தருணத்தில் இந்த இரண்டு பாத்திரங்களுக்கிடையிலான உணர்வுப் பரிமாற்றம் உங்கள் கண்களில் ஒரு சொட்டு நீர் வரவைக்கும் அல்லது மனம் நெகிழ்ந்து கைதட்ட வைக்கும்.

படத்தின் கதைசொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில உத்திகள் வெகு சிறப்பு. மாணவனை அடித்த மெர்லின் குற்ற உணர்ச்சியில் மூழ்கி இருப்பதைக் காட்ட அவளது காலில் பிளாஸ்டிக் கவர் மாட்டிக்கொண்ட உணர்வே இல்லாமல் அவள் வெகுநேரம் அலைந்துகொண்டிருப்பதும்,. அவளது துன்பத்தைப் பதிவுசெய்ய கர்ணன் கூத்தைக் காட்டுவதும், , கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் அவர்களது தற்போதைய மனநிலையை விவரிக்க மகாகவி பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை மிகச் சரியான விதத்தில் பயன்படுத்தியிருப்பதும் சில உதாரணங்கள்.

படத்தின் வசனங்களும் பல இடங்களில் நெகிழ்ந்து கைதட்டவைக்கின்றன. மெர்லினைத் தேடிச் சென்ற இடத்தில் அவளது அம்மாவுக்கு உதயன் சொல்லும் பதில் மற்றும் உதயனின் கோபத்தைத் தணிக்க தாளாலரின் மனைவி சொல்லும் விளக்கம் ஆகியவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

மிக ஆழமாகவும அழுத்தமாகவும் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தின் இன்னொரு பலம். ஒரே ஒரு காட்சியில் வரும் லாரி ட்ரைவர், பள்ளிக் கல்வித் துறை அலுவலர், விளையாட்டு ஆசிரியர், பாலியல் கல்வியை வலியுறுத்தும் அறிவியல் ஆசிரியை, பள்ளித் தளாலர், அவரது மனைவி, கிறிஸ்தவ மத போதகரான மெர்லினின் அம்மா என அனைத்து பாத்திரங்களும் மனதில் பதிகின்றன.

உதயனாக நடித்திருக்கும் பாவல் நவகீதனைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுமே புதுமுகங்கள். அனைவருமே குறையின்றி நடித்திருக்கிறார்கள். ராதிகா பிரசித்தா இன்னும் சில ஆண்டுகளுக்கு நடிப்புத் திறமை மிக்க நாயகியாக நிலைக்கலாம். வசனமே பேசாமல் முகபாவங்களால் மனதைத் தொடுகிறார் சத்யா. சுட்டிப் பையன் மாஸ்டர் அஜய் முதலில் புன்னகை பூக்கவைத்து பிறகு அவனுக்காக ஏங்க வைக்கிறான்.

அறிமுக இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனின் பாடல்கள் அனைத்தும் லயித்துக் கேட்கவைக்கின்றன. குறிப்பாக பாரதியார் பாடல். பின்னணி இசையும் காட்சி தரும் உணர்வுக்கு வலு சேர்க்கிறது.

இயற்கை ஒளியைப் பயன்படுத்தியிருக்கும் மணிகண்டனின் ஒளிப்பதிவும் சி.எஸ்.பிரேமின் படத்தொக்குப்பும் படத்துக்குப் பக்க பலம்.

கேளிக்கைக்காக மட்டும் படத்துக்குச் செல்பவர்களை இந்தப் படம் கொஞ்சம் ஏமாற்றலாம். தொடக்க காட்சிகளில் கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்கான காட்சிகள் கொஞ்சம் அளவுக்கதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.முடிவு வசதியான ஒன்றாக அமைந்திருப்பதாக சிலருக்குத் தோன்றாலாம்.

இவை சின்னச் சின்னக் குறைகள் மட்டுமே.படம் எழுப்பும் கேள்விகலூம் தரும் செய்திகளும் அவை சொல்லப்பட்டிருக்கும் விதமும் நம் அனைவரின் கவனத்துக்கும் பரிசீலனைக்கும் உரியது.

மொத்தத்தில் 'குற்றம் கடிதல்' தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

மதிப்பெண்- 4/5

More News

'தல' ரசிகர்களுக்கு இன்றிரவு இரட்டை விருந்து?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் எப்போது வரும் என...

துல்கார் சல்மானுடன் ஜான்வி நடிப்பது உண்மையா? ஸ்ரீதேவி விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தில் விஜய்க்கு இணையாக பேசப்பட்டு வருபவர் நடிகை ஸ்ரீதேவி...

கோலிவுட் ஹீரோயிஸத்தை உடைத்ததா 'மாயா'?

கோலிவுட் திரையுலகம் என்றாலே ஹீரோயிஸம் அதிகம் உள்ள துறை என்றுதான் கூறப்படுவதுண்டு...

விரைவில் 'ராஜதந்திரம்' இரண்டாம் பாகம் வெளியீடு

கடந்த மார்ச் மாதம் வெளியாகி வெற்றி படங்களில் ஒன்றாக விளங்கிய திரைப்படம் 'ராஜதந்திரம்'. கவுதம் மேனன் இயக்கிய 'நடுநிசி நாய்கள்' ...

கபாலி-கபிலன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...