4 வருடங்களுக்கு முன் இதே நாளில்.. சூர்யாவுடன் மோதிய சாய்பல்லவி!

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

சூர்யா, சாய்பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' வெளியானதை அடுத்து ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம் இதுதான் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை செல்வராகவனின் டீம் நிறைவேற்றும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன் சூர்யாவுடன் இதே நாளில் மோதிய அனுபவம் குறித்து சாய்பல்லவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாய்பல்லவி நடித்த முதல் படமான 'பிரேமம்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தான் வெளியானது. மலர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்த சாய்பல்லவி இந்த ஒரே படத்தால் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார். இதே நாளில் தான் சூர்யாவின் 'மாஸ் என்கிற மாசிலாமணி' வெளியானதாகவும், அன்று சூர்யாவுடன் மோதிய நிலையில் இன்று சூர்யாவுடன் இணைந்து நடித்த படம் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

சாய்பல்லவின் இந்த டுவீட்டை அவரது ரசிகர்கள் ரீடுவிட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர். மேலும் 'பிரேமம்' படத்தின் நான்காவது வருடத்தையும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.