மறைந்த பிரபல தமிழ் கவிஞருக்கு சாகித்ய அகாதமி விருது
- IndiaGlitz, [Thursday,December 21 2017]
சாகித்ய அகாதமி விருது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி ஆகியோர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
‘காந்தள் நாட்கள்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக கவிஞர் இன்குலாப் அவர்களுக்கும், ‘கதாக்கின் இதிகாசம்' என்ற மலையாள நூல் மொழி பெயர்ப்பு புத்தகத்திற்காக யூமா வாசுகி அவர்களுக்கும் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த கவிஞர் இன்குலாப், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 35 வருடங்களாக தமிழ் விரிவுரையாளராக பணி யாற்றினார். தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், ‘நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற காலத்தால் அழியாத காவிய படைப்புகளை எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் இன்குலாப் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து சரியாக ஒரு வருடம் கழித்து அவருக்கு சாகித்ய அகாதமி என்ற பெருமை கிடைத்துள்ளது.