எப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,March 06 2021] Sports News
இந்தியக் கிரிக்கெட் அணியில் மறக்க முடியாத மற்றும் அசைக்க முடியாத லெஜண்டாக வலம் வந்தவர் சுனில் கவாஸ்கர். இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் கடந்த 1971 மார்ச் 6 ஆம் தேதி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி இன்றோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளார். இந்தப் பயணத்தை நினைவுகூரும் விதமாக இன்றைய அகமதாபாத் கிரிக்கெட் போட்டியின்போது, கேக் வெட்டி ரசிகர்களோடு தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 70, 80 களில் இந்திய அணியில் பெரும் ஆதிக்கம் செலுத்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர். இவர் கலந்து கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மரண அடி அடித்து அணியை எப்படியும் வெற்றிப்பெற செய்து விடுவார். அப்படியும் முடியாமல் போகும் நேரத்தில் ட்ராவிற்காக அணியை கொண்டு சென்று விடுவார். 1983 ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள ஒரு பெரும் காரணமாக இருந்தவர் சுனில் கவாஸ்கர். ஒருவேளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு இவருடைய ஆட்டத்தைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அனைத்து மூத்த தலைமுறை வீரர்களுக்கும் ஒரு காலத்தில் இவர்தான் ஹீரோவாக இருந்து இருக்கிறார்.
அந்த வகையில் நம் காலத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கிரிக்கெட் உலகில் ஒரு இடி இடித்தது. நாங்கள் அனைவரும் அவரின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தோம். அவரை நான் ஹீரோவாக பார்த்தேன். அந்த எண்ணம் என்றும் மாறாது” என நெகிழ்ச்சிப் பொங்க டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சுனில் கவாஸ்கர் ஒரு காலத்தில் டான் பிராட்மேனின் 29 சதத்தை முறியடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி விளையாடி வந்தாராம். ஆனால் அந்த சாதனையை எல்லாம் முறியடித்து 34 சதம் என்ற சாதனையுடன் டெஸ்ட் மேட்சில் மட்டும் 10 ஆயிரத்து 122 ரன்களை குவித்து உள்ளார். அதேபோல 180 ஒருநாள் போட்டிகளில் 3,092 ரன்களை எடுத்துள்ளார். இவருடைய பெரும்பாலான அதிரடிகள் அனைத்தும் அந்த காலத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரானதாக இருந்து இருக்கிறது.
இவர் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போட்டியில் 3 சதம் விளாசி உள்ளார். அதிலும் ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸிலும் இரட்டை சதம் விளாசியதை அன்றைய காலத்து கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகித்து பாராட்டி உள்ளனர். அதோடு ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸில் இப்படி இரட்டை சதம் விளாசுவதை 3 முறை செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்தியக் கிரிக்கெட் அணியில் ஒரு மாபெரும் அதிரடி ஆட்டக்காரராக இருந்த சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் பயணத்தில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .
A tribute to My Idol! ?????? pic.twitter.com/l6nP89pUQi
— Sachin Tendulkar (@sachin_rt) March 6, 2021