தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்
- IndiaGlitz, [Tuesday,December 19 2017]
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள தோஞ்சா என்ற கிராமத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. சச்சின் இதற்கு முன்னரே ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தம்ராஜு கன்ட்ரிகா என்ற கிராமத்தை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தோஞ்சா கிராமத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.4 கோடியை, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சச்சின் வழங்கியுள்ளார். இந்த பணத்தின் மூலம் தோஞ்சா கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கக் கூடிய நீர் விநியோகத் திட்டம், கான்கிரீட் சாலைகள், கழிவுநீர் குழாய்கள், கழிப்பறை கட்டுமானம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கிராமத்தின் தெருக்களில் சோலார் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கிராமமே இரவிலும் ஜொலிக்கின்றது
இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் இந்த கிராமத்திற்கு வருகை தந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். மேலும் இந்த கிராமத்து சிறுவர்களுடன் சச்சின் சில நிமிடங்கள் கிரிக்கெட் விளையாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோஞ்சா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சச்சின், 'இந்த கிராமத்து மக்களின் உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியின் உதவியுடன் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என்று நாம் நம்புகிறேன். ஆரம்பகாலத்தில் ஒருசில சவால்கள் இருந்தபோதிலும், அவற்றை வெற்றிகரமாக கடந்து தற்போது உத்வேகத்துடன் செயல்பட்டு கிராம முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபடுவோம். இந்த தோஞ்சா கிராமம் நாட்டில் உள்ள மற்ற கிராமங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்