கோலி ஆசையாகக் கொடுத்த பரிசைத் திருப்பிக்கொடுத்த சச்சின்… என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தான் ஓய்வுப்பெறும்போது விராட் கோலி ஒரு அன்பு பரிசைக் கொடுத்ததாகவும் அதை மீண்டும் அவருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைக் கேட்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் அதற்கான காரணத்தைக் கூறிய சச்சின் தனது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் களம் இறங்கினார். தொடர்ந்து இந்தியாவிற்காக 200 டெஸ்ட், 463 ஒருநாள், 1 டி20, 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 18,426 ரன்கள், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்கள், ஒருநாள் போட்டியில் அதிகப்பட்சமாக 200 ரன்கள், ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகள் என்று எட்ட முடியாத பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆசைக்காக கடந்த நவம்பர் 16, 2013 இல் களமிறங்கி விளையாடிய சச்சின் அதற்குப்பிறகு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற அந்தத் தருணத்தில் கண்ணீர் வடித்தபடியே ஒரு மூலையில் நான் அமர்ந்திருந்தபோது விராட் கோலி என் அருகில் வந்தார். மேலும் அவரிடம் இருந்த ஒரு மதிப்பற்ற ஒரு பொருளை எனக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்த நான் சிறிது நேரத்திற்குப் பிறகு அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டேன் என்று சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

அதாவது ஓய்வை நினைத்து சச்சின் வருந்துவதைப் பார்த்த கோலி மனமுருகி இருக்கிறார். மேலும் அவர் அருகில் வந்தவுடன் உயிரிழந்த தனது தந்தை பிரேம் கோலி தனக்கு கொடுத்த ஒரு புனித கயிற்றைக் கழற்றி அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். முதலில் இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்த நான் விராட் கோலியிடமே திரும்பிக் கொடுத்துவிட்டேன். காரணம் அவருடைய தந்தை கொடுத்த மதிப்புள்ள பொருள். அது அவரிடம்தான் இருக்க வேண்டும். இதை கோலியும் புரிந்து கொண்டார் எனத் தெரிவித்திருக்கிறார் என்று சச்சின் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோலி குறித்து சச்சின் பகிர்ந்து கொண்ட இந்தக் கருத்து தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.