கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு மோசம் அடைந்து உள்ளது. அதிலும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதி இல்லாமலும் போதிய ஆக்சிஜன் இல்லாமலும் பல மாநிலங்களில் அவதியுற்று வருகின்றனர். இதனால் பல உலகநாடுகள் தற்போது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டவும் தயாராகி உள்ளன.
இந்நிலையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்து இந்தியா முழுக்க உள்ள மருத்துவமனைகளுக்கு அதைக் கொண்டு சேர்க்கும் வகையில் “மிஷன் ஆக்சிஜன்” எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக அவரே டிவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்த பதிவில் சச்சின் “நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றிபெற உதவியது. அதேபோல் இன்று இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’‘ எனக் கூறியுள்ளார்.
மேலும் மிஷன் ஆக்சிஜன் எனும் அமைப்பானது 250 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பதையும் இந்தக் குழு ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்து வருவதாகவும் சச்சினே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்று அடைய வேண்டும் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
???? pic.twitter.com/rFEDOCFOkP
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2021