பிகில் படத்தில் விஜய் காவி வேட்டி கட்டியது ஏன்? எஸ்.ஏ.சி.யின் ஆவேச பதில்
- IndiaGlitz, [Friday,June 28 2019]
விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அதில் விஜய் காவி வேட்டி கட்டி சிலுவை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விஷயம் 'பிகில்' வெளியாகும்போது பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'கேப்மாரி' என்ற படத்தை இயக்கி வரும் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் காவி வேட்டி கட்டி அலைய போகிறார்கள் என்று பேசினீர்கள், தற்போது உங்கள் மகன் விஜய் காவி வேட்டி அணிந்து 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.ச்நதிரசேகர், 'நான் கூறிய கருத்தை என்னை மையப்படுத்தி மட்டும் கேள்வி கேளுங்கள். இதில் விஜய்யை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். உங்கள் அப்பா சொன்னதால்தான் காவி வேட்டி கட்டிக்கொண்டு நடித்தீர்களா? என்று விஜய்யிடம் போய் கேளுங்கள் என்று ஆவேசமாக பதிலளித்தார். எஸ்.ஏ.சியின் இந்த பதில் பத்திரிகையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.