நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து விஜய் தந்தை கருத்து

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று காலை தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த தண்டனை குறித்து இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது:

நிர்பயா குற்றச் சம்பவத்தை நினைத்தாலே கொடுமையான ஒரு விஷயமாக, யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக உள்ளது. எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு விஷயமாகும். கொஞ்சம் காலமாக தான் இப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெற்று வருவதாக நான் நினைக்கின்றேன்.

பல ஆண்டுகள் இந்த வழக்கு தள்ளிப்போய், இன்றுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவருடைய எண்ணம். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு காலங்கடந்த ஒரு தண்டனையாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் நமது சட்டம் இன்னும் சரியாக இல்லை. சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற என்னுடைய படங்களில் சட்டங்கள் குறித்து நான் பலவற்றை கூறியுள்ளேன். நமது சட்டங்கள் அனைத்தும் எப்பொழுதோ ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாக உள்ளது. இன்றைக்கு குற்றங்கள் அதிகமாகி விட்டது, கிரிமினல்கள் அதிகமாகிவிட்டனர். அதற்கேற்றவாறு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், வலுவாக்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தான் இத்தனை வருடம் குற்றவாளிகள் தண்டனையை தாமதிப்படுத்திவிட்டனர். ஆனாலும் இன்றைக்கு இப்படி ஒரு தண்டனை நிறைவேற்றப்பட்டது, நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.

கடுமையான குற்றம் செய்தால் இப்படிபபட்ட தண்டனை கிடைக்கும் என்று நீதி உறுதி செய்துள்ளது. இதை பார்த்தாவது இன்றைய இளைஞர்கள் கடுமையான குற்றங்கள் செய்தால் தண்டனை உறுதி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார்.