தமிழகப் பாஜகவில் வெடித்த புது சர்ச்சை… கிடைக்குமா பதில்!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
சினிமா நடிகரும் பாஜக முக்கியப் பிரமுகரும் ஆன எஸ்.வி.சேகர் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரல் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் தமிழகத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு பாஜக வேட்பாளருக்கும் தலா ரூ.13 கோடி செலவு செய்யப்பட்டதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். மேலும் அதன் வரவு செலவு கணக்கு ஒப்படைக்கப் பட்டுவிட்டதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த பல ஆண்டுகளாகவே பாஜக சரிவை சந்தித்து வந்தது. இதனால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முனைப்புடன் அக்கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டனர். அதன் விளைவாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி 4 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் வெற்றிப்பெற்ற நிலையில் மிதமுள்ள பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை இழந்து இருக்கிறது. இதனால் பாஜகவின் தோல்வி குறித்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர்.
கொரோனா காரணமாக இந்த ஆலோசனைக் கூட்டம் டிவிட்டர் ஸ்பேசஸ் என்ற சமூக வலைத்தளம் மூலம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய எஸ்.வி.சேகர் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ.13 செலவிடப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருகிறது. அதோடு ஒருத்தருக்கு 13 என்றால் ஒட்டுமொத்தமாக பாஜக சார்பில் ரூ.260 கோடி செலவு செய்யப்பட்டதா எனவும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய மகளிரணி செயலாளரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்க விரும்பாததும் குறிப்பிடத்தக்கது.