கமல்-கவர்னர் சந்திப்பு நடக்குமா?
- IndiaGlitz, [Monday,July 24 2017]
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சர்கள் மீது டுவிட்டரில் போர் தொடுத்து வருகின்றார். அவரது ஆக்கபூர்வமான கருத்துக்கள் ரசிகர்களை மட்டுமின்றி நடுநிலையாளர்களையும் கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர்களின் ஊழல் குறித்து அவர்களது இமெயிலுக்கே புகார் அனுப்பும்படி சில நாட்களுக்கு முன் கமல் கூறிய கருத்து அனைவரையும் கவர்ந்தது. ஊழல் குறித்து குற்றச்சாட்டுக்கள் பெருகி வந்த நிலையில் திடீரென அமைச்சர்களின் இணையதளங்களில் இமெயில்கள் காணாமல் போயின. இருப்பினும் அசராத கமல், அமைச்சர்கள் இமெயில்கள் இல்லாவிட்டால் என்ன, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்களை அனுப்புங்கள் என்று ஐடியா கொடுத்தார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும் கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பருமான எஸ்.வி.சேகர், 'ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, ராஜ்கமல் அலுவலகத்திற்கு பொதுமக்கள் ஊழல் புகார்களை அனுப்ப வேண்டும் என்றும், அந்த புகார்களை கமல், நேரடியாக கவர்னரை சந்தித்து அளிக்கலாம் என்றும் ஐடியா கூறியுள்ளார். ஏற்கனவே குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசின் ஆட்சிக்கு ஆபத்து என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஊழல் புகார்களுடன் கமல்-கவர்னர் சந்திப்பு நடந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.வி.சேகரின் ஐடியாவை கமல் செயல்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.