“வால்க தமில்” – தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்தினை கிண்டலித்த எஸ்.வி.சேகர்
- IndiaGlitz, [Wednesday,February 05 2020]
முன்னதாக, தமிழகப் பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் என அனைவரது மத்தியிலும் எதிர்ப்பு குரல்கள் வலுத்தன.
இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப் பட இருந்த பொதுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், பழைய முறையே தமிழகப் பள்ளிகளில் கடைபிடிக்கப் படும் எனவும் உறுதி அளித்தார். இந்த முடிவினை தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் வரவேற்று, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் பா.ஜ.க. வின் முக்கிய ஆளுமையாக கருதப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பள்ளி பொதுத் தேர்வு முறையினைக் கிண்டல் செய்யும் விதமாகத் தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் “5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை உத்தரவு. அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில்” எனக் குறிப்பிட்டு உள்ளார். “வாழ்க” என்பதற்கு ”வால்க” என்றும் ”தமிழ்” என்பதற்கு ”தமில்” எனக் கிண்டல் தொணியில் பதிவிட்ட எஸ்.வி. சேகரின் டிவிட்டர் பதிவினைத் தற்போது சமூக வலைத் தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை உத்தரவு. அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில்.
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) February 5, 2020