ஸ்பீக்கரில் பாட்டுக் கேட்டவருக்கு 3 வருடம் சிறையா? இதுவேற லெவலா இருக்கே!
- IndiaGlitz, [Monday,July 19 2021]
பொதுமக்களுக்கு இடையூறு தரும் விஷயங்களை செய்பவர்களுக்கு பொதுவாக அபராதம் விதிக்கும் வழக்கம் பல நாடுகளில் இருந்து வருகிறது. ஆனால் ஸ்பீக்கரில் சத்தமாகப் பாட்டு கேட்ட நபருக்கு ரஷ்ய நீதிமன்றம் 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனை விதித்து இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ரஷ்யாவின் நிஸ்னீ நோவ்ரூடு பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் 47 வயதான யூரி கோண்ட்ராட்டேவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் குதிரை கனைப்பது போன்ற சத்தத்தை தனது வீட்டு ஸ்பீக்கரில் அதிகச் சத்தத்தோடு வைத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கடும் அவஸ்தைக்கு உள்ளாக்கி இருக்கிறார். இதனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் ஏதோ குதிரை லாயத்தில் வசிப்பது போலவே உணரத் துவங்கி விட்டனர்.
இதுகுறித்து யூரியை பலமுறை எச்சரிக்கவும் செய்து இருக்கின்றனர். ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத யூரி தினமும் இரவு வேளையில் குறைந்தது 2 மணிநேரம் குதிரை கனைக்கும் சத்தத்தை தனது ஸ்பீக்கரில் போட்டுக் கேட்டு வந்துள்ளார். இதனால் யூரியைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விசாரித்த காவலர்கள் யூரியை கடுமையாக எச்சரித்ததோடு பலமுறை அபராதமும் விதித்துள்ளனர்.
ஆனாலும் ஸ்பீக்கர் வைத்து மற்றவர்களை கடுப்பாக்கும் வேலையை யூரி தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதனால் இவர் மீதான புகார்களும் அதிகமாகத் துவங்கின. கடந்த ஆண்டு மட்டும் யூரி மீது 80 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் யூரியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3.5 வருடம் சிறை தண்டனை விதித்து இருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் யூரி தனது வீட்டில் குதிரை சத்தத்தை ஸ்பீக்கரில் போட்டிருந்தாராம். இந்நிலையில் தற்போது சிறை தண்டனை பெற்ற யூரி சிறையில் பொழுதை கழித்து வருகிறார். அப்பார்ட்மெண்ட் வாசிகள் நிம்மதியாக உறங்கி வருகின்றனர்.