16 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து விலக்கிய ரஷ்யா… இந்தியாவின் நிலைமை என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து சில உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தன.
இதையடுத்து தனக்கு எதிராக ஐ.நாவில் வாக்களித்த நாடுகளை ரஷ்யா தற்போது தனது நட்புப் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாக அதிகாரப் பூர்வமாகத் தகவல் வெளியிட்டு உள்ளது. அதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா, ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மான்டெனெக்ரோ, நார்வே, தைவான், சான் மரினோ, ஸ்விட்சர்லாந்து, உக்ரைன் ஆகிய 16 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தனது நட்புப் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனக்கிருந்த வீட்டோ அந்தஸ்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது. இதைத்தொடர்ந்து ஐ.நா. பொதுச்சபையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில் இந்திய மாணவர்களை மீட்பதே தலையாயப் பிரச்சனை என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தற்போது இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்ப தயாராக வைத்திருக்கும் விண்கலத்தில் இந்தியாவின் கொடியை நீக்காமல் மற்ற அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கொடிகளை மட்டும் நீக்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments