இனி நீங்க என்ன பாக்கணும்னு நாங்க முடிவு பண்ணுவோம், வருகிறது ரஷ்யாவிற்கு மட்டும் தனி இன்டர்நெட்..! #Runet
- IndiaGlitz, [Friday,December 27 2019]
ரஷ்யா தனது நாட்டிற்கு மட்டுமான சொந்தமாக ஓர் இணையத்தை (Internet) உருவாக்கி வந்ததாகத் தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரிதாக எந்தவொரு தகவலும் வெளியிடாமல் ''உலகளாவிய இணையத்திற்கு மாற்றாக, ரஷ்யாவிற்கு மட்டுமான இணையம் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருக்கிறது என்று மட்டும் தெரிவித்திருக்கின்றனர்.ரஷ்யாவின் இந்த இணையத்திற்கு 'RuNet' என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் திட்டம் தற்போது சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த இணையம் செயல்முறைக்கு வந்தால், தங்கள் நாட்டுக் குடிமக்கள் எந்தெந்த விஷயங்களைப் பார்க்கலாம் என அந்நாட்டு அரசாங்கம்தான் முடிவு செய்யும். நிறுவனங்களில் இருக்கும் Intranet-ன் பெரிய சைஸ் வெர்ஷன் இது. இந்தக் கட்டமைப்பில் அரசாங்கம் தடை செய்யும் எந்தத் தகவலையும் மக்களால் இணையத்தின் மூலம் எந்த வழியிலும் அணுகவே முடியாது.
இதற்கு முன் சீனாவும், சவுதி அரேபியாவும் கூட இணையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அரசாங்கம் அனுமதிக்கும் தகவல்களை மட்டுமே மக்கள் பார்க்கும் ஓர் இணைய கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றன. தற்போது ரஷ்யா அதன் அடுத்த கதவைத் தட்டியிருக்கிறது. இது எதுவரை செல்லும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.