ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் எதுவும் இருக்கக்கூடாது… அதிரடி காட்டும் கம்யூனிச நாடு!!!
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளத்திற்கும் தடை விதிக்க ரஷ்யா அரசாங்கம் முடிவெடுத்து உள்ளது. காரணம் அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெளியிடும் சில செய்திகளை இத்தகைய சமூக வலைத்தளங்கள் தணிக்கை செய்து அழித்து விடுவதாகப் பரபரப்பு புகார் கூறியுள்ளது. இதனால் அரசாங்கத்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காத எத்தகைய சமூக வலைத்தளங்களுக்கும் இங்கு அனுமதி இல்லை என்ற கருத்தையும் அந்நாட்டு அரசு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ஃபேஸ்புக். ட்விட்டர், யூடியூப் எனும் 3 சமூக வலைத் தளங்களுக்கும் தடை விதிக்கும் வரைவு மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வரைவு மசோதாவிற்கு அந்நாட்டு மேல் சபையும் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் ரஷ்யாவில் இனி ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என எந்த சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் விழிப்புணர்வு குறித்த தவறான கருத்துகளைப் பதிவிடும் நபர்களின் பதிவுகளை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் எனும் அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தணிக்கை செய்து வந்தன. அதேபோல அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட சில பதிவுகளையும் இந்தச் சமூக வலைத்தளங்கள் தணிக்கை செய்து அழித்து வருவதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது. தற்போது ஒரு நாட்டின் அரசாங்கமே சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிப்பது குறித்து உலக நாடுகள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.